கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் 18ம் தேதி டெல்லி சென்றிருந்தார். தொடர்ந்து 29ம் தேதி கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு தனியார் விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். அப்போது அந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில், பிரபுவின் குழந்தைகள் தியா, ரிதன் மற்றும் மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலியாகினர். இந்நிலையில், 3 பேரின் உடல்களும் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உப்பிடமங்கலம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி மனதை உருக்குலைய வைத்தது.