தமிழக அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தடை போட்டு வருகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர்,
சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
மாநிலத்தில் ஆளும் கட்சி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது, மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றனர் என்றும் அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியுள்ளனர் என அவர் கூறினார்.
மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிராகத்தான் மாநில அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் திட்டங்களை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அதனால் கூட்டணி குறித்து அப்போது தெரிவிப்போம் என்றும் தமிழ்நாடு அரசு விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மட்டுமல்ல, பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்குத் தடை போட்டனர் என்றும் மண்டபத்திற்கு உள் வைத்து நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர், எனவே தமிழக அரசு அனைத்து கட்சிகளும் தடை போட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.