ராமநாதபுரத்தில் இருதரப்பு மோதல் விவகாரம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணை சார்பு ஆய்வாளர் செல்போனில் ஆபாசமாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகேயுள்ள கம்மாக்கரை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மகாதேவி மற்றும் சவுதாராணி ஆகியோரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக மகாதேவி என்பவரின் உறவினர் திருப்பாலைக்குடி சார்பு ஆய்வாளர் முனீஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர்களின் எதிர்தரப்பினரான சவுதாராணி குறித்து சார்பு ஆய்வாளர் முனீஸ்வரன் ஆபாசமான முறையில் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.