பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடியை அடுத்தடுத்து இந்தியா கொடுத்து வருகிறது. சைபர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஹேக்கர்கள் சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்களில் மீண்டும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர் குழுக்களான “Cyber Group HOAX1337” மற்றும் “National Cyber Crew” ஆகியவை இந்திய இராணுவ இணையதளங்களுக்குள் ஊடுருவ முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளன.
இராணுவ நர்சிங் கல்லூரி, இராணுவ பொதுப் பள்ளிகள், இராணுவ நல வீட்டுவசதி அமைப்பு, இராணுவ நல வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் பிற இந்திய ராணுவம் தொடர்பான இணையத்தளங்களைக் குறிவைத்து இந்த சைபர் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தியுள்ளது.
நகரோட்டா மற்றும் சுஞ்சுவானனில் உள்ள இராணுவ பள்ளி இணையதளத்தை முடக்கவும், அதில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியான இந்துக்களை அவமதிக்கும் வகையில் பொய்ச்செய்திகளை வெளியிடவும் முயற்சி நடந்துள்ளது. மேலும் ஹோட்டல் மேலாண்மைக்கான இராணுவ பள்ளி மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கான மருத்துவச் சேவைக்கான இணைய தளத்தை முடக்கவும் முயற்சி நடந்துள்ளது.
முக்கியமான மத்திய அரசின் நெட்வொர்க் அமைப்புக்கள் உள்ளே ஊடுருவ முடியாத விரக்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள்,குழந்தைகள், கல்வி மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த இணையதளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் உயர் அடுக்கு சைபர் பாதுகாப்பு கட்டமைப்பைத் தாண்டி,பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஊடுருவ முடியவில்லை. பாகிஸ்தானில், இந்த சைபர் தாக்குதல்களை அடையாளம் கண்டு, உடனடியாக இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல்களில், ‘பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அறிக்கை & புதுப்பிப்பு’ என்ற தலைப்பில் ஒரு தீங்கிழைக்கும் PDF கோப்பு, அனுப்பப்பட்டிருப்பதை இந்திய சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்,நீண்ட காலமாகவே டிஜிட்டல் போரையும் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இருநாடுகளின் ( DGMO) டிஜிஎம்ஓக்களுக்கு இடையேயான வாராந்திர HOTLINE பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தான் நடத்தும் டிஜிட்டல் அத்துமீறல் குறித்து இந்தியா எச்சரித்திருந்தது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு,10 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா சைபர் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைத் தவிர, மத்திய கிழக்கு நாடுகள், இந்தோனேசியா மற்றும் மொராக்கோவிலிருந்தும் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்கும் பல ஹேக்கர் குழுக்கள் இந்தியா மீதான சைபர் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில்,பாகிஸ்தான் சைபர் தாக்குதல்களை மீண்டும் நடத்தி இருப்பது, தங்கள் பொறுமையையும், நிதானத்தையும் சோதிப்பது போல் தெரிகிறது என்று இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு மட்டும், பாகிஸ்தான் இராணுவம் 15 முறைப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 2,651 முறை எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டருகே, பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மூன்று முறை பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது.
இதற்கிடையே, இந்தியக் கடற்படை தனது போர் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் துல்லியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஏவுகணை அழிப்பு கப்பலான INS சூரத் கப்பலில், எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படியும் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும் எனக் குறிப்பிட்டு, இந்தப் போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக வான்வழிப் போர்முனையில்,இந்திய விமானப்படையும் தயார் நிலையில், போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் சைபர் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.