2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றம் தொடங்கித் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வரை அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசுவதற்கான காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய வருகை பாஜக – அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் கூட்டணி செயல்படும் என ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்திருப்பது அதிமுக, பாஜக என இரு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல கட்சிகளைக் கூட்டணிக்குள் வரவைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏராளமான கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற இறுமாப்போடு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கூட்டணி உருவாவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டிய சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் கேள்வி எழுப்பியதன் மூலம் அது வெளிச்சத்திற்கும் வந்தது.
முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் பாஜகவுடனான கூட்டணியை மறைமுகமாக விமர்சித்த நிலையில், நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன எனப் பதில் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷா வருகைக்குப் பின் அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் சட்டமன்றம் மட்டுமல்லாமல் தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், கட்சி கூட்டங்கள், இல்லத் திருமண விழாக்கள் என அனைத்திலுமே அதிமுக – பாஜக கூட்டணியைப் பற்றியே முதலமைச்சர் இன்றளவும் ஒருவித பதற்ற உணர்வோடு பேசிக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என நிர்பந்திக்க முடியுமா ? என அதிமுகவை நோக்கி முதலமைச்சர் எழுப்பிய அவருக்கே பின்னடைவை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தற்போது அதிமுகவை நோக்கிக் கைநீட்டுவது ஏமாற்றும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதே கூட்டணியோடு தேர்தலைச் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தை அடியோடு சிதைக்கும் வகையில் இந்த பாஜக – அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது.
அதிமுகவை அடிமைகளைப் போல் சித்தரிப்பதும், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது போன்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க திமுகவும் அதன் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். திமுகவினரின் முயற்சி ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அதிமுக – பாஜக கூட்டணியை மட்டுமே விமர்சிக்கும் அளவிற்கான பதற்றத்தை முதலமைச்சருக்கு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு என திமுக மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதிருப்தியை அறுவடை செய்யச் சரியான நேரத்தில் பாஜக – அதிமுக கூட்டணி உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.