தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151-வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவுக்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, முதலமைச்சர் தனக்குத் தானே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொள்வது போல அவரது பதிவு உள்ளதாக விமர்சித்துள்ளார்.
அரசைக் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைக்கும் திமுகவுக்குப் பிறரைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எமெர்ஜென்சி காலத்தின்போது 253 பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதையும் அதில் 3 பேர் உயிரிழந்ததையும் மறந்து விட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அறியாமல் இருக்கிறார் என்பதையே அவரது பதிவு வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, பத்திரிகை சுதந்திரம் குறித்து பாஜகவுக்குப் பாடம் எடுப்பதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனப் பதிவிட்டுள்ளார்.