பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவம் தொலைதூர இலக்குகளை தாக்கும் வகையில் ஏவுகனை சோதனை நடத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் ராணுவம் சிந்து போர் பயிற்சி என்ற பெயரில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். வரும் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த போர் பயிற்சியில் கப்பல்களில் இருந்து ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்துவது குறித்து பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், டெல்லியில் பிரதமர் மோடியை, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி நேரில் சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய கடற்படையின் பலம், மேற்கொண்டு வரும் போர் பயிற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.