வெப்பத்தின் அளவை குறைத்து குளிர்ச்சியை பரப்பும் மூலிகை தன்மை கொண்ட வெட்டிவேர் மாலைகளின் விற்பனை சேலத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெட்டிவேரால் தயாரித்து விற்கப்படும் மாலைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தின் அலையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு விதமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். உடலை குளிர்விக்க குளிர்ச்சியான பழச்சாறுகள் அருந்திவரும் நிலையில் வீடுகளையும் குளிர்விக்க வெட்டிவேர் மாலையை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெட்டிவேர் மாலையை கட்டினால் அப்பகுதி முழுவதுமே குளிர்ச்சியாக காணப்படும் என்கின்றனர் மாலை விற்பனையாளர்கள்
முன்னொரு காலங்களில் வீடுகளின் பூஜை அறைகளில் மட்டுமே காணப்படும் இந்த வெட்டிவேர் மாலை தற்போது கதவு, ஜன்னல் என பல இடங்களில் கட்டி தொங்கவிடப்படுகிறது. அதோடு வெட்டிவேரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விற்பனையும் அண்மைக்காலாமாக அதிகரித்து வருகிறது.
ஆறு அடி உயரம் கொண்ட வெட்டிவேர் மாலைகள் 400 ரூபாய் முதல் ஆயிரத்து இருநூறு ரூபாய் வரையிலும், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகள் 250 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை தொடும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை சக்திகள் நிறைந்த வெட்டிவேர் மாலையை நாடியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது