திருப்பூர் அருகே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :”திருப்பூர் மாவட்டம் குண்டடம் சூரியநல்லூர் அருகே உள்ள சேர்வக்காரன் பாளையத்தை சேர்ந்த நடராஜ், அவரது மனைவிஆனந்தி, மற்றும் அவர்களது பெண் குழந்தையான செல்வி. தீக்ஷயா ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தாராபுரம் – காங்கயம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் தடுமாறி குள்ளாய்பாளையம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதில் நடராஜ் மற்றும் ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குழந்தை தீக்ஷயாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த நடராஜ்-ஆனந்தி தம்பதிக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள், மகள் தீக்ஷயா 7-ம் வகுப்பும், மகன் ரித்தீஷ் 5-ம் வகுப்பும் தாராபுரத்தில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
சாலை பணியை மேற்கொண்டவர்கள் சரியான எச்சரிக்கை தடுப்பு அமைக்காததே விபத்திற்கு காரணம் என தெளிவாகத் தெரிகிறது. அரசின் அலட்சியத்தால் இன்று இரு உயிர்கள் பலியாகி, ஒரு குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது என்பதை நினைத்தாலே தாங்க முடியாத துன்பம் நெஞ்சை கிழிக்கிறது.
தலைநகர் சென்னை உட்பட தமிழகத்திலுள்ள எல்லா பகுதிகளிலும் சாலைகள் எவ்வளவு மோசமாகவும், குண்டும் குழியுமாக பழுதான நிலையிலும் உள்ளது என்பதை ஸ்டாலின் சாலைவழி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டால் அறிந்துகொள்வார்.
ஆகவே, அரசு நிர்வாகத்தின் அவலம்தான் இந்த விபத்திற்கும், பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழப்பதற்கும் முக்கியக் காரணம். இதற்கு பொறுப்பேற்க மனமில்லாத அரசோ இறந்தவர்களுக்கு நிவாரண நிதியை வழங்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறது. அதிலும் பாரபட்சமாக, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ₹10 லட்சம், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வெறும் ₹3 லட்சம் என்பது என்ன வகையான நியாயம்?
தாய் தந்தையரை ஒருசேர இழந்து நிராதரவாக நிற்கும் பிஞ்சுக் குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டாவது தமிழக அரசு அளித்த நிவாரணத் தொகையை பலமடங்கு உயர்த்தியும், சிகிச்சைப் பெற்று வரும் தீக்ஷ்யாவுக்கான மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டும், பெற்றோர்களை இழந்து வாடும் அந்த இரு பிள்ளைகளுக்குமான படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்ற வண்ணம் ஆணையை பிறப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இது போன்ற அசம்பாவிதங்கள் இனியும் நடக்காமலிருக்க, தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை சீராக அமைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.