உசிலம்பட்டி அருகே சூறைக்காற்று காரணமாகப் பப்பாளி மற்றும் முருங்கை மரங்கள் ஒடிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழைக்கு முன்னதாக வீசிய சூறைக்காற்று காரணமாக உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன் கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.
ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்களில் பழங்கள் அறுவடை செய்யவிருந்த நிலையில் மரங்கள் ஒடிந்ததால், 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.