கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
65 சதவீத வனப்பகுதியைக் கொண்ட நீலகிரி மாவட்டம் வனவிலங்குகளின் புகலிடாக உள்ள நிலையில், அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடிக் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், கூடலூர் அருகே நிலக்கோட்டை பஜார் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், காட்டு யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வரும் ஒற்றை யானையை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.