வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இப்படி கண்களைப் பறிக்கும் தண்ணீருடன் தகதகவென மின்னும் வைகை அணை. ஆனால் வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் மூல வைகை ஆறோ காய்ந்து கட்டாந்தரைபோல் காட்சியளிப்பது பலரையும் வேதனைப்பட வைத்துள்ளது.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
8 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது மூல வைகை ஆறு. வைகை அணையின் முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வரும் மூல வைகை ஆறுதான் தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்த காரணத்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையாலும் வெயில் காலங்களில்கூட மூல வைகை ஆற்றில் நீர் வரத்து கணிசமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டோ பருவ மழை சரியாகப் பெய்யாத நிலையில் மூல வைகை ஆறு கடந்த ஒரு மாதமாகத் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு மணல் மேடாக காட்சியளிக்கிறது. மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைபாதையாக மாறி வருகிறது
மூல வைகை ஆறு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கடமலை – மயிலை ஒன்றிய பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறையே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால் விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். மூல வைகை ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட உறைக் கிணறுகளை முறையாகத் தூர்வாரியும், பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
எப்படி இருந்த மூல வைகை ஆறு இப்படி ஆயிடுச்சே என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் பெருமூச்சாக இருக்கிறது. குடிநீர்த் தேவையும், விவசாயமும் என்ன ஆகுமோ என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.