இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலைத் தவிர்க்க வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இதுதொடர்பாக பேசியுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதெனத் தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முக்கியமான இந்த நேரத்தில் ராணுவ மோதலை தவிர்ப்பது அவசியம் எனவும், போர் தீர்வல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றத்தைத் தணிக்கத் தேவையான எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவாக ஐ.நா.செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அண்டோனியோ குட்டரெஸ், இதன் மூலம் அமைதி நிலவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.