பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளுக்குப் புரியும் மொழியில் இந்திய ராணுவம் பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் பதில் தாக்குதலை வரவேற்கும் வகையில் ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய பாதுகாப்புப் படைக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் தொடக்கம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரத தாயே வாழ்க என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். போராளியின் சண்டை தொடங்குகிறது என்றும், பணி நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும், முழு நாடும் பிரதமர் மோடியுடன் துணை நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய பாதுகாப்புப் படைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆப்ரேன் சிந்தூர் திட்டத்தை வரவேற்று வெற்றிவேல், வீரவேல் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேச நலன் கருதி நமது ராணுவத்திற்கு என்றும் துணை நிற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்திய இந்திய ராணுவத்திற்குப் பாராட்டு எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் நமது ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ஆப்ரேஷன் சிந்தூர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.