பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின்கீழ் துல்லியமாகத் தாக்கிய இந்திய ராணுவத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பாதுகாப்புப் படைகளை நினைத்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத அமைப்புகள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தேசியக் கொள்கை உறுதியானது என குறிப்பிட்டுள்ளார். மேலும், 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கிய இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது நமது ஆயுதப்படை நடத்திய தாக்குதலை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இன்னொரு பஹல்காம் சம்பவம் ஏற்படாத வகையில் கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.