பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானால் கடன் வாங்கி இந்தியாவுடன் போர் செய்ய முடியுமா?… இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!
இயற்கை எழில் கொஞ்சும் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் கொடூர சதியை நிகழ்த்தினர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ராணுவம் துணை போனது தெரியவந்தது.
அமைதியாக இருந்த புலியைச் சீண்டிவிட்டதால் தற்போது அதன் பின்விளைவுகளைப் பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள் சம்மட்டி அடியாக விழுந்துள்ளன.
பாகிஸ்தான் விமானங்களுக்குத் தனது வான்வெளியை மூடிய இந்தியா, இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய அனைத்து கப்பல்களுக்கும் தடை விதித்தது. பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வரும் அனைத்து பாகிஸ்தான் இறக்குமதிகளையும் தடை செய்தது. பாகிஸ்தானுடனான அனைத்து அஞ்சல் மற்றும் பார்சல் பரிமாற்றங்களையும் நிறுத்தியது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் சமீபத்தில் மட்டும் பாகிஸ்தானுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 3 ஆயிரத்து 786 கோடி ரூபாயாக இருந்தது. இந்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதில், முக்கியமாகச் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் செனாப் நதி வறண்டு பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்து உணவுப் பஞ்சம் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலில் இந்தியாவுடன் போர் செய்வதற்குப் பாகிஸ்தானால் செலவு செய்ய முடியுமா?. ஏற்கனவே கடன் வாங்கி பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பஞ்சத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானால், புதிதாகக் கடன் வாங்கி அந்தப் பணத்தில் போர் செய்ய முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்க உள்ளது. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிதி உதவிகளைப் பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது என்பதைக் குறிப்பிட்டு நிதி வழங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகத் தெரிகிறது.
ஆசிய மேம்பாட்டு வங்கி பாகிஸ்தானுக்கு 43.4 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவதாக கடந்தாண்டு உறுதி அளித்தது. அதில் தற்போது வரை 9.13 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
சர்வதேச நாணய நிதியத்தைப் போல இந்த இரு அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானுக்கு வரக்கூடிய நிதியை தடுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 28 பில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது. உலக வங்கியிடம் இருந்து 23.55 பில்லியன் டாலரும், ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் இருந்து 19.63 பில்லியன் டாலரும் கடனாகப் பாகிஸ்தான் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தானின் மொத்த கடன் 284 பில்லியன் டாலரை எட்டும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் சூழல், உணவுப் பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, பணவீக்கம் எனக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும். இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி, மற்றும் உலக வங்கியிடம் இருந்து வழங்கப்பட வேண்டிய நிதியும் நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானின் நிலை கவலைக்கிடம் தான்..!