பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் குறித்து வைத்து நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்த இரு பெண் அதிகாரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பாதுகாப்புத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் கர்னல் சோபியா குரேஷி குறித்தும் வியோமிகா சிங் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கணவரின் அருகே உருக்கமாக அமர்ந்திருந்த பெண் ஒருவரின் புகைப்படம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய கொடூரச் சம்பவத்திற்குக் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவதும் எழத் தொடங்கியது. அதற்கேற்ப பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் பிரதமர் மோடி சூளுரைத்திருந்தார்.
அமைச்சரவைக் கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து போர் ஒத்திகைக்கான அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தான் கனவிலும் நினைத்திராத நேரம் பார்த்து 9 இடங்களில் துல்லியமான தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்திருக்கிறது. ஆப்ரேஷன் சிந்தூர் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய ராணுவத்திற்குப் பாராட்டுகள் குவித்து வருகின்றன.
இதற்கிடையில் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது எப்படி? என்பதை விளக்கிய இரண்டு வீரமங்கைகளின் விவரங்களும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்தியப் பாதுகாப்புத்துறையில் எத்தனையோ ஆண் அதிகாரிகள் இருக்கும் போது, இந்த இரு பெண் அதிகாரிகளை வைத்து விளக்கியது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலின் போது பெண் ஒருவரை உயிருடன் விட்டு மோடியிடம் நடந்ததைக் கூறுங்கள் எனத் தீவிரவாதிகள் கூறிய தகவலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த இரு பெண் அதிகாரிகளை வைத்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியின் தாத்தா இந்தியா ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அதோடு ராணுவ அதிகாரியையே கர்னல் குரேஷி திருமணமும் செய்துள்ளார். பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப்படைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரிய சோபியா குரேஷி, 2006 ஆம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா அமைதிப்படையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பங்கேற்றார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ஸ் 18 கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியப் படையை வழிநடத்திய சோபியா குரேஷி, ராணுவத்தில் இணைந்து பெண்கள் பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சோபியா குரேஷியை தகுதி, தலைமைத்துவம் மற்றும் திறன் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ததாக அப்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் தெரிவித்திருந்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்த மற்றொரு பெண் அதிகாரியான வியோமிகா சிங், குழந்தைப் பருவம் முதலிருந்தே வானில் பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் விமானியாக இணைந்த இந்த வியோமிகா சிங் வானில் 2,500க்கும் அதிகமான மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கிய பெருமைக்குரிய வியோமிகா சிங், 2020 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் வெள்ள காலத்தில் மக்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இத்தகையை இரு சக்திவாய்ந்த பெண் அதிகாரிகளை வைத்துத் தாக்குதல் குறித்தும், தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விளக்கியது மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் மரியாதையையும், அவர்கள் மீதான நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.