பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழிக்க, இந்திய ராணுவம் ஆற்றல்மிக்க அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் உள்ளிட்டவை ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
250 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள இலக்குகளை வான்வழியாகத் தாக்கி அழிக்க ஸ்கால்ப் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஹேமர் (HAMMER) குண்டுகள் 50 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் முகாம்களைத் தாக்க இந்த ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் ஆற்றல்மிக்க இந்த குண்டுகளை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் அதிநவீன ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூசைட் ட்ரோன்கள் எனப்படும் ‘Loitering Munitions’ வகையைச் சேர்ந்த ட்ரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், ரபேல் விமானம் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. 4 முதல் 6 ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரபேல் மற்றும் சுகோய் விமானங்களிலிருந்து சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரமோஸ் ஏவப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த பிரமோஸ் ஏவுகணை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தயாரித்த அதிவேக ஏவுகணையாகும். மேலும், இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிய யுஏவிஎனப்படும் ஆளில்லா நெட்ரா விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.