பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து அழித்தது. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசாரின் குடும்பத்தார் 10 பேர் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்த நிலையில், இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், பஞ்சாப் எல்லையான அமிர்தசரஸ் – பட்டாலா சாலையில் உள்ள ஜெதுவால் கிராமம் அருகே, வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்-15 ஏவுகணை என்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.