ஆப்ரேஷன் சிந்தூர்- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் காந்தகார் விமானக் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப் பட்டுள்ளார். பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி செல்லாமல், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொன்றவர்களைக் கொன்ற ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் இராணுவமும்,அந்நாட்டு உளவுத் துறையும் இருந்ததை இந்தியா உறுதி செய்தது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் கண்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறியதற்கேற்ப, கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்திய ‘ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான’ தாக்குதல்களை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தியது.
மௌலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது, ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சையத் சலாவுதீனின் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய முக்கியமான மூன்று முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் உள்ள 21 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 இடங்கள் பாகிஸ்தானிலும் உள்ளன.
விரிவான உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் இந்த 9 இலக்குகளும் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கன கச்சிதமாகத் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில், பஹ்வல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள முகாம்களில் தான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் கோல்மன் ஹெட்லி பயிற்சி பெற்ற முகாம்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பயங்கரவாத முகாம்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு முன், வேறு இடத்தில் பதுங்கியதால் மசூத் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
மசூத் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் மற்றும் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூப் அசாரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.
பயங்கரவாதியான மசூத் அசாரை 1994ம் ஆண்டு, இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு, 154 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர். மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மசூத் விடுவிக்கப்பட்டார்.
1999-ல் கந்தஹார் விமானக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிதான் அப்துல் ரவூப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் , 9 பயங்கரவாத தளங்கள் மீது நடத்திய தாக்குதலில், சுமார்100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைக் கோள் படங்கள், தாக்குதலின் தாக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் என்பது, பஹல்காம் தாக்குதலுக்கு மட்டுமல்ல, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கான பதிலடியாகும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கையாகும்.
பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தாமல், பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து, அளவிடப்பட்ட தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. இந்தியாவின் தார்மீகப் பொறுப்புணர்வையும், தர்மத்தையும் ஆப்ரேஷன் சிந்தூர், உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகத்துக்கு ஆதாரத்துடன் காட்டியுள்ளது. மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பிம்பத்தைச் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது இந்தியா.
இதன் பிறகு இருநாடுகளுக்குமான உறவு பழைய மாதிரி இருக்காது என்றும்,பாகிஸ்தானில் உள்ள கடைசி பயங்கரவாதியைக் கொல்லும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்று ராணுவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.