நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள் பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். இதற்கு, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்ட லக்ஷ்ர்-இ -தொய்பாவின் நிழல் அமைப்பான TRF பொறுப்பேற்றது.
இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் உறுதிப்படுத்தப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவத் தாக்குதல்களை இந்தியா நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பயங்கரவாத தளங்களில் இயங்கி வந்த 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தாக்கி அழிக்கப் பட்டன.
25 நிமிடங்களில் முடிந்த, முப்படைகளின் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம், தனக்குச் சாதகமாக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பிரதிநிதிகளும் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்த உறுப்புநாடுகள் அனைத்தும், அந்த தாக்குதலுக்குக் காரணமான லக்ஷ்ர்-இ -தொய்பாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு பற்றி பாகிஸ்தானிடம் கேள்விகள் எழுப்பப் பட்டன.
பல சமயங்களில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) போன்ற பல சர்வதேச அமைப்புகள், பாகிஸ்தானின் பயங்கரவாத குற்றங்களைக் கண்டும் காணாமல் இருந்துள்ளன. இதனால் தான் , பாகிஸ்தான் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில், பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறது.
மேலும், ஜிஹாதி பயங்கரவாதிகளைக் காப்பற்ற, பல மோசடி நடவடிக்கைகளை எடுத்து ஐநா மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவையும் பல காலமாக ஏமாற்றி வந்துள்ளது. குறிப்பாக, சாம்பல் பட்டியலில் இருந்து நாட்டின் பெயரை நீக்குவதற்காக, மும்பை தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கியது பாகிஸ்தான். சயீத்தின் மைத்துனரான பயங்கர வாதி, அப்துல் ரஹ்மானுக்கும் வெறும் ஆறு மாத சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல்களின் சதியின் ஒவ்வொரு கட்டத்திலும் பயங்கரவாதி சஜித் மிர் இருந்ததாக, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஹெட்லி காட்சியளித்துள்ளார். இந்நிலையில், லக்ஷ்ர்-இ -தொய்பாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்த சஜித் மிர், இறந்துவிட்டதாக முதலில் பாகிஸ்தான் அறிவித்தது. மரணத்தின் ஆதாரத்தைச் சர்வதேச நாடுகள் கேட்டன. சர்வதேச அழுத்தம் தாங்க முடியாமல், செத்துப்போன அந்த பயங்கரவாதியை உயிருடன் கண்டுபிடித்து கைது செய்தது பாகிஸ்தான்.
இப்போது, இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, பயங்கரவாதி சஜித் மிர் வழக்கை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் பொய் முகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் சர்வ தேசத்தை ஏமாற்றி வருகிறது.
ஜமாத் உத் தாவா (ஜேயுடி) என்று இயங்கிவந்தது. அதற்கும் தடை என்றபின், ஃபலா-இ-இன்சானியத் அறக்கட்டளையாக மறுபிறவி எடுத்தது. அதுவும் தடைசெய்யப் பட்ட பிறகு, அல்லா-உ-அக்பர் தெஹ்ரீக் ஆக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 370வது சட்டப் பிரிவை நீக்கிய பிறகு லஷ்கர் இ தொய்பா TRF யைத் தொடங்கியது.
இதுபோல, ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பும் அல்-ரஹ்மத் டிரஸ்ட் (ART) என்ற பெயரில் கல்வி மற்றும் மத தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. காஷ்மீர், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜிஹாதிகளை ஆள் சேர்ப்பதற்கும், பயங்கரவாத செயல்களுக்கான நன்கொடைகளைப் பெறுவதற்கும் இந்த அறக்கட்டளை பயன்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பாகிஸ்தானின் தேசியக்கொடி போர்த்தி நடத்தப் படுகிறது. அதில், பாகிஸ்தான் இராணுவத் தளபதிகள் உட்பட அரசின் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பயங்கரவாதத்துக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என்று தொடர்ந்து கூறிவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, இந்தியா மீது பதிலடி கொடுக்க முயன்று வருகிறது.
இவற்றை எல்லாம் சர்வதேச நாடுகள்,உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான பொருத்தமான தண்டனை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.