பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 21 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா அழித்துள்ளது. அதனால், இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அரசு போருக்குத் தயாராகி வரும் நிலையில் அந்நாட்டின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2023ம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தைச் சமாளிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ள பாகிஸ்தான், ஏற்கெனவே சர்வதேச ஆணையத்திடம் கடன் கேட்டுக் கையேந்தியது.
அதற்காக, அரசுக்குச் சொந்தமான 6 அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், 1.5 லட்சம் அரசுப் பணிகளை உடனடியாக நீக்கவும், 2 அமைச்சகங்களை ஒன்றாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வரும் ஜூலை மாதத்துக்குள், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உட்பட நான்கு அரசு வங்கிகளை விற்கவும் முடிவெடுத்தது.
கூடுதலாக, நாட்டின் வருமானத்தை உயர்த்த பாகிஸ்தான் அரசு, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியது. 2023ம் ஆண்டு, வருமான வரி வலையில் சுமார் 3,00,000 பேர் புதிதாக விழுந்தார்கள். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு, 8,00,000 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய வரி செலுத்துபவர்களாக ஆக்கப்பட்டார்கள். இதன் மூலம் பாகிஸ்தானின் மொத்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக அதிகரித்துள்ளது.
2024 ஜூலை முதல் ஏப்ரல் 2025 ஏப்ரல் வரையிலான ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானில் சம்பளம் வாங்கும் சராசரி மக்கள், ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 10 ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளனர்.அதே நேரம், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் 60 பைசா மட்டுமே வரி செலுத்தியுள்ளனர்.
அதாவது, பாகிஸ்தானில் அரசு வசூலிக்கும் மொத்த வருமான வரியில் 10 சதவீதம், சம்பளம் வாங்கும் சாமானியர்களால் செலுத்தப்படுகிறது. இது கடுமையான பாரபட்சமான வரி முறையாகும். கடந்த ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 டிரில்லியன் டாலராகும். ஆனால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 374 பில்லியன் டாலராகும். அதேபோல்,கடந்த ஆண்டு, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,711 டாலராகவும், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,581 டாலராகவும் இருந்தது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தான் GDP 2.6 சதவீதத்துக்கும் குறைவாகவே வளரும் என்று சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானின் GDP, இந்திய ரூபாய் மதிப்பில் 31.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் ஒரு மாநிலத்தின் GDP யை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் GDP 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த GDPயை விட 11 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். மேலும், தமிழ்நாட்டின் GDP கிட்டத்தட்ட 30 லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நிதியாண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை ஒன்றாம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டில், இராணுவத்துக்காக ஒதுக்கீட்டை 18 சதவீதம் அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிக்கு, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் அக்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் வருமானம் கடனுக்குத் திரும்பிச் செலுத்தவே போதுமானதாக இல்லை. இதில், முழுமையான போரில், பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியுமா ? என்றால் இல்லை என்றுதான் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.