வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், போர் பாதுகாப்பு ஒத்திகைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 7-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம், வடசென்னை சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், விமான நிலையம், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி எண்ணூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தின் அலகு இரண்டில், போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைப்பது, தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போர் பாதுகாப்பு ஒத்திகையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.