எல்லையில் 3வது நாளாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்தியக் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.
இந்திய நிலைகளை நோக்கி வீசப்பட்ட 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்துத் தாக்கி அழித்தது. இதனிடையே 3வது நாளாகக் காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
நள்ளிரவில் 26 இடங்களில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் எல்லையிலிருந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதற்காக இந்த நிலைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவை அழிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள ஷம்பு கோயில் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கோயிலின் முகப்பு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்களை போலீசார் சேகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.