பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிலுள்ள குடியிருப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்க 4-வது நாளாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நோக்கி அதி கனரக ஆயுதங்களைக் கொண்டும், ட்ரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவிலுள்ள மருத்துவ நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடர்ந்து வருவதாகக் கூறிய அவர், தாக்குதலில் சிலர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.