பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, இந்திய இராணுவத் தளங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை ஒரே இரவில் இந்தியா முறியடித்துள்ளது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏவுகணைகளும் ட்ரோன்களும் வானத்தை ஒளியைச் சிதறிக் கொண்டு பறந்தன.விண்ணைப் பிளக்கும் வெடிச்சத்தங்கள் ஜம்முவை உலுக்கின. அதைத் தொடர்ந்து சைரன்கள் அலறின. அவசர மின்தடை அமலுக்கு வந்தது. ஊரெங்கும் இருட்டு. இருட்டு வானில் தோன்றி மறையும் மின்னல்கள் போலப் பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானில் இடைமறித்து அழித்தன.
அதிர்ச்சியடைந்த நிலையில் மக்கள், அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் இந்த காட்சிகளைத் தங்கள் செல்போனில் வீடியோக்களாக பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரைத் தாண்டி, சண்டிகர், ஃபெரோஸ்பூர், மொஹாலி மற்றும் குருதாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் பகுதிகளுக்கும் மின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில், ராணுவ உள்கட்டமைப்பு பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள இந்திய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரான் தாக்குதல்களை நடத்தியது.
ஜம்மு விமான நிலையம், சம்பா,ஆர்.எஸ்.புரா, அர்னியா ஆகிய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகளை, இந்தியாவின் S-400 வான் தடுப்பு பாதுகாப்பு வெற்றிகரமாக இடை மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளன. மேலும் பதான்கோட், உதம்பூர் இராணுவத் தளங்களை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களையும் இந்தியா முறியடித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புமில்லை, பொருள் சேதமுமில்லை என்று கூறியுள்ள இந்திய ராணுவம், தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுஅளவில் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பதான் கோட், அமிர்தரஸ்,ஜலந்தர், மொஹாலி ஆகிய மாவட்டங்களிலும்,சண்டீகரிலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டன. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில், குறிப்பிட்ட சில பகுதிகளில், குறிப்பாக இராணுவ உள்கட்டமைப்பு அமைந்துள்ள இடங்களில், முன்னெச்சரிக்கை மின் தடை உத்தரவிடப்பட்டது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக,எல்லை கட்டுப் பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே,அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், சண்டிகர், ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை வேரறுக்கும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்கிறது.