அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து அமைதிச் சிற்பிகளான தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் நன்றி தெரிவிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் தாய்மார்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு அன்னையும், அவர்களது தன்னலம் பாராத குணமுமே அடிப்படையாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.
நம் வாழ்வில் முதல் ஆசிரியர்களாக உலகை அறிமுகப்படுத்துவது தாய்மார்களே என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில் தன்னலமற்ற அன்பினையும், எல்லையில்லா பொறுமையையும் வெளிப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களைச் செய்பவர் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பாலோடு பலத்தையும் ஊட்டி வளர்த்த தன் அன்னைக்கு அன்னையர் தினத்தைச் சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.