அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். ஆண்டிமடம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணியை ரவியின் மனைவி செல்வியும், மூத்த மகள் ரஞ்சனியும் கவனித்து வந்துள்ள நிலையில், 12ஆம் வகுப்பில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 2வது மகள் சந்தியா, இருவருக்கும் உணவு சமைத்து தந்தையிடம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதிய உணவிற்கு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்போது, சந்தியா இறந்து கிடந்த நிலையில் தந்தை ரவி தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், செல்போன் பார்ப்பதைக் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மகளை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.