பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டிற்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அணு ஆயுத மிரட்டலுக்கு என்றும் அடிபணிய மாட்டோம் என உறுதிப்படக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக விமானப்படை வீரர்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டார். எதிரியின் குகைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் நிலைகளை இந்திய ராணுவம் அழித்ததாகக் கூறிய பிரதமர், ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி நாடு முழுவதும் எதிரொலிப்பதாகத் தெரிவித்தார்.
நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் தூக்கத்தைத் தொலைத்துவிட்டதாகவும், இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதைப் பாகிஸ்தான் உணர்ந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.