பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது என பலூசிஸ்தான் விடுதலைப் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது பலூசிஸ்தான் விடுதலைப் படையினரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அவர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தின் 51 இடங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து 71 முறை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பலூசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத ஊக்குவிப்பு, மத ரீதியான கட்டமைப்பில் இருந்து பாகிஸ்தான் அரசால் வெளியே வர முடியாது என தெரிவித்துள்ளது.
லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது, ISIS உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக குற்றம்சாட்டியுள்ள பலூசிஸ்தான் விடுதலைப் படை, பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் டெல்லியில் தங்களுக்கென பிரத்யேகமாக தூதரகம் ஒன்றை திறக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.