உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.
நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தார்.
1985ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய இவர்,
2003ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகளில் புத்த மதத்தை பின்பற்றும் இரு நீதிபதிகளில் ஒருவர் பி.ஆர்.கவாய் ஆவார். உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை பி.ஆர்.கவாய் எழுதியுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். பணமதிப்பிழப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதித்துறை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனுக்கு எதிரான வழக்கில் 1 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்தார்.
எஸ்சி, எஸ்டி பிரிவில் உள் வகைப்படுத்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய பி.ஆர்.கவாய், தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்விலும் இடம்பெற்றிருந்தார். இந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெறும் பி.ஆர்.கவாய், 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.