டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை, சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கை எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அத்துடன் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, மனு குறித்து பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத்துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.
















