அரசு நிர்வாகத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள் மக்களுக்கு எந்தவகையிலும் உதவ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காட்சிப் பொருளாக மாறியிருக்கும் இ சேவை மையங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அரசு நிர்வாகத்தின் சேவை பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் கிடைக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த இ-சேவை மையங்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு மின்னணு ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இ-சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உட்பட சுமார் 14 ஆயிரத்திற்கும் இடங்களில் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்களில் தங்களுக்கான சேவைகள் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
இ சேவை 2.0 எனும் பெயரில் அந்த சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டாலும் கொரானோ தொற்று பரவலால் தொடங்கப்பட்ட வேகத்திலேயே அம்மையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒரே இடத்தில் தங்களுக்குச் சேவையான அனைத்து சேவைகளும் கிடைக்கும் என நம்பி இ -சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலுமே மிஞ்சுகிறது.
பல இடங்களில் இ சேவை மையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஒருசில இடங்களில் இருக்கும் இ சேவை மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. அதிலும் விரைவில் பள்ளி தொடங்கவிருக்கும் நிலையில் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டுகளை பெற இ – சேவை மையங்களை நாடும் நிலையில் கணினி பழுது, நெட்வொர்க் சேவை பாதிப்பு எனத் தொழில்நுட்பக் கோளாறுகளும் சேவை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மக்களுக்குச் சேவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தொடங்கப்பட்ட நோக்கத்தையே மறக்கும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்த இ-சேவை மையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனைச் சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.