சென்னை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையோரங்களில் நிறைந்திருக்கும் ராட்சத கருவிகளும் சாலைகளில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, சாலைப்பணி என ஒரே நேரத்தில் முறையான ஒருங்கிணைப்பின்றி நடைபெறும் பணிகள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன. அதோடு எந்தவித திட்டமிடலுமின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளும் இணைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக எந்தவித மாற்றுச்சாலைகள் ஏற்பாடுகளின்றி பல சாலைகள் மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் மையப்பகுதிகளாகத் திகழும் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மெட்ரோ பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் பணி முடிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் இருப்பது விபத்தை உண்டாக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.
பரபரப்பாக இயங்கும் சென்னையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் பணிகள் தடையாக இருப்பதும், குறுகலான சாலைகளின் இருபுறமும் ராட்சத கருவிகளைப் போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் பல இடங்களில் தடுப்புகளைப் பல மாதங்களாக வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலால் தினசரி பல இன்னல்களைச் சந்திக்கும் பாதசாரிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல திட்டமிடும் போது முன்கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் தான் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாகத் திட்டமிட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.