AI காரணமாக இன்னும் 24 மாதங்களில், பல்வேறு துறைகளில் பல வேலைகள் வேகமாக மறைந்து போகப் போகிறது. எந்த எந்த வேலைகள் இல்லாமல் போகும்? இந்த ஆபத்தான சூழலில், யாரால் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வம் AI மயம் என்ற நிலையில், AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. சுகாதாரம், சில்லறை விற்பனை தொடங்கி, படைப்பாற்றல், நிதி, சுகாதார உட்பட அனைத்து துறைகளிலும் AI வந்து விட்டது. ஏற்கெனவே, 2030ம் ஆண்டுக்குள், உலகளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைகள் AI-யால் கைப்பற்றப்படலாம் என்று McKinsey மெக்கின்சி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏதோ வெறும் தொழிற்சாலை வேலைகளை மட்டும் AI காலி செய்யும் என்றில்லை. எல்லாத் துறைகளிலும் AI- ஆல் பல வேலைகள் மறைந்து போகும் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், AI தொழில்நுட்ப நிபுணரும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான (Replit) ரெப்லிட்டின் நிறுவனருமான ((Amjad Masad)) அம்ஜத் மசாத், 2027 ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பம் காரணமாகப் பல வேலைகள் இல்லாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான பாட்காஸ்ட்களில் ஒன்றான (Steven Bartlett ) ஸ்டீவன் பார்ட்லெட்டின் The Diary of a CEO நேர்காணலில் பங்கேற்ற ((Amjad Masad)) அம்ஜத் மசாத், வழக்கமான, மீண்டும் மீண்டும் வரும் கணினி பணிகளை நம்பியிருக்கும் எந்த வேலையும் மறைந்து போகும் விளிம்பில் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
மளிகைச் சங்கிலிகள் முதல் தொழில்நுட்பக் கடைகள் வரை பல சில்லறை விற்பனைக் கடைகளில் சுயமாகச் சரிபார்ப்பு செய்யும் முறைகள் வழக்கமாகி வருகின்றன. AI தொழில்நுட்பத்துடன் கூடிய வரி மென்பொருள்கள் பெருகி வருவதால், சட்ட ஒப்பந்தங்களைப் பகுப்பாய்வு செய்ய, நிதி அறிக்கைகளைத் தயாரிக்க, சிக்கலான ஆவணங்களை நொடிகளில் உருவாக்க, ஜெனரேட்டிவ் AI வந்து விட்டது. எனவே, காசாளர்கள், கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய ஒயிட்-காலர் எலைட் வேலைகளும் காணாமல் போகும்.
“Text In-Text Out” டெக்ஸ்ட் இன்-டெக்ஸ்ட் அவுட் வகையிலான டேட்டா என்ட்ரி மற்றும் தட்டச்சு, தர உறுதி சோதனை மற்றும் தரவைச் சரிபார்த்தல் போன்ற தொடர்ச்சியான செயல்கள் தேவைப்படும் எல்லா வேலைகளும் இனி இருக்காது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ள ((Amjad Masad)) அம்ஜத் மசாத், AI- ஆட்டோமேஷனுக்கு ஏற்ற எல்லா வேலைகளும் முதலில் அழிந்து போகும் என்று கூறியுள்ளார்
செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் என்று கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டனும், AI மனிதர்களிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும், AI-யின் அசுர வளர்ச்சி ஆபத்தின் அறிகுறி என்றும் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே, மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ், கூகுள் சுந்தர் பிச்சை, ஓபன்AI சாம் ஆல்ட்மன் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், AI வளர்ச்சியடைந்து வரும் வேகம் மற்றும் அது செல்லும் திசை இரண்டையும் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் AI தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. 2027ம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பத் துறையில், 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று Bain & Company ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மனித திறனுக்கும் இயந்திரத் திறனுக்கும் இடையிலான போட்டி வேகமடைந்து உள்ளது. வேலை பாதுகாப்பானதா என்பது மிக அவசரமான கேள்வி அல்ல. AI தொழில்நுட்பத்தால், எளிதில் பிரதிபலிக்க முடியாத திறன்களை வளர்த்துக் கொள்வதே இன்றைய தேவையாகும்.