வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது பரிவட்டம் கட்ட மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின்போது அரசு அதிகாரிகளுக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு தேரோட்டத்தின்போது வீரபாண்டி பேரூராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த கீதா என்பவருக்கு அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டியுள்ளார்.
அப்போது, தனது கணவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பதவிகளில் இல்லாதவருக்குப் பரிவட்டம் கட்ட முடியாது என்று அதிகாரிகள் கூறிய நிலையில், 2 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், வேறு வழியின்றி சசிக்கு அதிகாரிகள் பரிவட்டம் கட்டியுள்ளனர்.
பின்னர், சசி அடியாட்களுடன் சென்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் சசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.