சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், மண்டல ஐஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பாக எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து இதே நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும், விரைவில் இந்த வழக்குகளில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.