தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகி வெளிநாடு வரை ஏற்றுமதி செய்யப்படும் இலவம் பஞ்சு குறித்தும், அதன் விலை இறக்கம் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமே திகழ்ந்து வருகிறது. அத்தகைய மாவட்டத்தில் நான்கு திசைகளும் மலைப்பகுதியை உள்ளடக்கிய கடமலை – மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தென்னை, முருங்கை, இலவம்பஞ்சு, அவரை, கப்பைக் கிழங்கு உள்ளிட்டவைகளோடு, இலவம் பஞ்சு விவசாயமும் பிரதானமாக விளங்கிவருகிறது. இங்கிருந்து உருவாக்கப்படும் இலவம் பஞ்சுகளின் மெத்தை மற்றும் தலையணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் விலையோ அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது.
கடந்தாண்டு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒருகிலோ இலவம்பஞ்சு நடப்பாண்டும் அதிக விலைக்கு விற்பனையாகும் என நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இலவம்பஞ்சு 40 ரூபாய்க்கும் கீழே விற்பனையாவதால் அதனைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடும் சூழலுக்கு அப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இலவம்பஞ்சை எடுக்கும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கூலியும், பஞ்சை பிரித்துத் தரும் பெண்களுக்கு 400 ரூபாயும் கூலியாக வழங்கப்படும் நிலையில், சாகுபடிக்குச் செய்த செலவைக் கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மகசூல் கொடுக்கும் இந்த இலவம் பஞ்சு விவசாயம் இந்த ஆண்டு ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு சாகுபடி செய்யும் எண்ணத்தையும் விவசாயிகள் கைவிடத் தொடங்கியுள்ளனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு இலவம்பஞ்சுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.