புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தீயணைப்பு நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், விழாவிற்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த கட்டட ஒப்பந்ததாரரைத் தகாத வார்த்தைகளால் பேசிய உதயம் சண்முகம், அங்குத் தேங்காய் வெட்ட வைத்திருந்த அரிவாளைக் கொண்டு ஒப்பந்ததாரரைத் தாக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.