ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காங்கிரசின் சசிதரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பிரதிநிதிகள் குழுவில் ஒன்றை வழிநடத்துவதற்கும் தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தேசத்தின் நலன் என்று வரும்போது ஒன்றுபட்டு உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நமது தேசத்தின் பார்வையை முன்வைப்பதற்கான குழுவை வழிநடத்துவதற்குப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.