தஞ்சை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படும் நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கோடை சாகுபடி செய்யப்பட்டு நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டுப் பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் விளைநிலங்களிலேயே சாய்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், எனவே பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்திலும் மழையில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்துள்ள இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்யும் சூழல் நிலவுவதால், பயிர்கள் முற்றிலும் அழுகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை பொதுப்பணித்துறை தூர்வாராததால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.