திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இடப்பிரச்சனையில் திமுக முன்னாள் கவுன்சிலர், கும்பலாக வீடு புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சர்கார் பெரியபாளையம் பகுதியை சேந்தவர் அசோக்குமார். அதே பகுதியிலுள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் என்பவருக்கும், அசோக்குமாருக்கும் இடப் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் அடியாட்களுடன், அசோக்குமார் வீட்டிற்குச் சென்று மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக அசோக்குமார் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் அசோக் குமார் வீட்டிற்குச் சென்ற கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அசோக்குமார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.