ரயில்வேயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
ரயில்வேயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24 ஆயிரத்து 470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்க உள்ளார்.
அதன்படி தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு 6.18 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்க்கப்பட்டுள்ளது. இதில் ரயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரயில் நிலையத்தின் பழைய நுழைவாயில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, ஶ்ரீரங்கம் கோயில் கோபுரம் மாதிரியான முகப்பு அமைப்புடன் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.