குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்தன. நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதில், தமிழகத்தில் உள்ள சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலைங்களும் அடங்கும். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து, தேஷ்னோக் ரயில் நிலையத்தில் கூடியிருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும், மாணவர்கள் தங்கள் கைப்பட வரைந்து எடுத்து வந்த புகைப்படங்களில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கர்ணி மாதாவிடம் ஆசி பெற்று பேச வந்துள்ளதாகவும், முன்பை விட ஆறு மடங்கு அதிக பணம் உட்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிடப்படுகிறது என்றும், பாரதம் தனது ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்கி வருவதாகவும் கூறினார். வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் நாட்டின் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் குறிக்கின்றன எனக்கூறிய அவர், ஒரே நேரத்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமாக்கப்படுவதாக தெரிவித்தார்.