பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களைத் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்ட நிலையில் இதனை எதிர்த்து வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து இதன் விசாரணையில் சட்டங்களுக்குத் தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்காமல் விசாரணை நடத்துவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக் கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்கள் பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தமிழக அரசின் சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.