டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாகவும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக 41 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளதாகவும், வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குற்றஞ் சாட்டப்பட்டவர்களைச் சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு, அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்கக்கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.