சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க, (Golden Dome)’கோல்டன் டோம்’ எனப்படும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு நாட்டின் இராணுவத் திறன்களில் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இராணுவ விமானத்தின் பூஸ்ட் மிட்கோர்ஸ் டெர்மினல் என பல்வேறு நிலைகளில் உள்வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து கண்காணித்து இடைமறித்து அழிப்பதற்காகப் பாதுகாப்பு அமைப்புகளை ஒவ்வொரு நாடும் உருவாக்கி வருகின்றன. இந்த பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்ட பல அடுக்குகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உருவாக்கியுள்ள IRON DOME உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அமைப்பாகக் கருதப் படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின் IRON DOME இடைமறித்து அழித்துள்ளது. அதற்கு முன் 20 நிமிடங்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவிய 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்களையும் தடுத்து நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப், இஸ்ரேலின் புகழ்பெற்ற IRON DOME -க்கு போட்டியாக ஒரு பாதுகாப்பு அமைப்பை, அமெரிக்கா உருவாக்கும் என்று கூறியிருந்தார்.
(Golden Dome) கோல்டன் டோம் என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்புத் திட்டமாகும். இது தரை, கடல் மற்றும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும். அமெரிக்க நிலப்பரப்பை மேம்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.
பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (BMD) மீது முக்கியமாக கவனம் செலுத்தும் பழைய அமைப்புகளைப் போலல்லாமல், கோல்டன் டோம் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள் (HGVs), குரூஸ் ஏவுகணைகள் மற்றும் AI- பொருத்தப்பட்ட ட்ரோன்களின் பெரிய ஏவுகணை கூட்டங்களைக் கண்டறிந்து தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பரந்த ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு (IAMD) திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிரி ஏவுகணைகளை குறிவைக்கும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மற்றும் இடைமறிப்பு செயற்கைக்கோள்கள் இரண்டையும் உள்ளடக்கியதாக(Golden Dome) ‘கோல்டன் டோம்’ திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, கோல்டன் டோமின் மையத்தில், உயர் தொழில்நுட்ப கண்டறிதல் சென்சார்கள், கண்காணிப்பு கருவிகள், இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க்குகள் போன்ற பல கருவிகள் இணைக்கப்பட்ட நெட்வொர்க்காக (Golden Dome) கோல்டன் டோம் செயல்படும். பாதுகாப்பு அமைப்பின் ஒவ்வொரு கூறுகளும் ஆட்டோமேட்டிக் முறையில் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான நிகழ்நேரத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறது.
(Golden Dome)’கோல்டன் டோம்’ திட்டத்துக்கான தொடக்க உத்தரவில், கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திட்ட ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிவதற்குள், ‘கோல்டன் டோம்’ லட்சியத் திட்டம் முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோல்டன் டோமின் ஏவுகணைகள், சென்சார்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட கூறுகளைச் சோதித்துப் பார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பென்டகன் இறங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் பங்குபெற ( Palantir ) பலந்திர் மற்றும் (Anduril ) அந்துரில் ஆகிய நிறுவனங்களுடன் எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளை நிலைகுலைய வைப்பதோடு,பூமியையே “போர்க்களமாக” மாற்றும் அபாயம் இருப்பதாக கோல்டன் டோம் திட்டம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் ஒரே குரலில் கருத்து தெரிவித்துள்ளன.
ஹைப்பர்சோனிக் வேகத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) ரஷ்யாவும் சீனாவும் வைத்துள்ள நிலையில், (Golden Dome) ‘கோல்டன் டோம்’ திட்டம் அவசியம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.