இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு தான்தான் காரணமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்ததை முற்றிலும் மறுத்தார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உண்டாகியிருந்த நிலையில், இரு நாடுகளும் பேசிக்கொள்ள ஒரு அமைப்பு இருந்ததாகத் தெரிவித்தார்.
அப்படித்தான் கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஒரு தகவலை அனுப்பியதாக அவர் கூறினார். அதில், தாக்குதலை நிறுத்த தயார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததை ஏற்று தாங்களும் செயல்பட்டோம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.