எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என அபுதாபியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு பயணம் மேற்கொண்டனர்.
அபுதாபிக்கு சென்ற குழுவினர் தேசிய ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் ஜமால் முகமது ஒபைத் அல் காபியை சந்தித்து பேசினர்.
இதையடுத்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம், எனக் கூறினார்.
இந்தியாவின் வலியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புரிந்து கொள்வதாகவும் இந்தியாவில் என்ன நடக்கிறது?, யார் அதைச் செய்கிறார்கள்? என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் கூறினார்.
இதனிடையே திமுக எம்.பி கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா சென்றடைந்தது. அவர்களை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் வரவேற்றார். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அந்நாட்டு அரசிடம் கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.