ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆண்டாள் சூடிய மாலை, பட்டு வஸ்திரம், கிளி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இறுதி தீர்ப்பு வந்த பின்னர் தான் கருத்து கூற முடியும் என தெரிவித்தார்.
300 சதவீத சொத்துவரி, மின் கட்டண உயர்வு காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்தையுமே அரசியலுக்காகவே செய்கிறது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை என்றும் அவர் சாடினார்.
ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறிவிட்டு, நாடாளுமன்ற தேர்தல் வந்த போது வாக்கு பெறுவதற்காகவே மகளிர் உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும், ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் நயினார நாகேந்திரன் தெரிவித்தார்.